மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்.. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 10 மீனவர்கள் கைது!
மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 10 மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்காலை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் விசைப் படகையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்கின்றனர்.
அவ்வப்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் வலைகள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் சந்திக்கும் இந்தப் பிரச்சனைகளுக்கு இன்னும் தீர்வுகண்டபாடில்லை.
இந்நிலையில் காரைக்காலில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி பிடித்ததாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளது.
காரைக்கால் மாவட்டம் கீழக்காசாக்குடி மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை விரட்டிச் சென்று 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகையிலிருந்து மீன்பிடிக்க சென்ற இவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 16ஆம் தேதி பிரதமர் மோடி இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகவுடன் சந்திப்பு நடத்தினார். இந்தியா வந்த இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க, பொருளாதார நெருக்கடியின்போது உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவரிடம் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதுகுறித்து அப்போது பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக கூறுகையில், "இலங்கை படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தீர்வு காண விரும்புகிறேம். மீனவர்கள் பிரச்சினை இருநாடுகளுக்கும் தலைவலியாகிவிட்டது. தமிழக மீனவர்கள் இரட்டை மடி வலையை பயன்படுத்துவதற்கு முடிவு கட்ட வேண்டும். இரட்டை மடி வலை பயன்படுத்துவது மீன்பிடித் தொழிலுக்கு பேரழிவு" எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
குறிச்சொற்கள்: